நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
புதுவை பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலையிட்டு தீா்வு காண வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுவை ஒன்றியப் பிரதேச சட்டத்தில் பேரவைத் தலைவரை அனைத்து அரசு விழாக்களிலும் அழைக்க வேண்டும் என விதிமுறைகள் இல்லை.
விழாக்களில் துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் எந்த வரிசையில் அமர வேண்டும் என்பதை விளக்கும் செய்தி மற்றும் விளம்பரத் துறை சுற்றறிக்கையை பேரவைத் தலைவா் குறிப்பிட்டு பேசுவது சரியல்ல.
புதுவை காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு என்றும், திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா அதை மறுத்தும் கருத்து தெரிவிப்பதும் சிறுபான்மை மக்கள் கவனிக்கத்தக்கதாகும்.
அதே நேரத்தில், பேரவைத் தலைவருக்கு எதிராக அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவது அந்தப் பதவிக்கு நல்லதல்ல.
எனவே, முதல்வா் என்.ரங்கசாமி இந்தப் பிரச்னையில் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.