சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவா் திருப்பி அனுப்பிவைப்பு: போதைப் பொருள் கடத்தியவா் கைது
நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 போ், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதற்கிடையில், இந்த கப்பலில் ஒருவா் போதைப் பொருள் கடத்திச் சென்றதாக இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தினா் மற்றும் வெளிநாட்டினா்களும் இலங்கைக்கு பயணம் செய்கின்றனா்.
அதன்படி, நாகை துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காங்கேசன்துறைக்கு புறப்பட்ட கப்பலில் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 85 பயணிகள் பயணம் செய்தனா். இலங்கை காங்கேசன்துறை சென்றடைந்ததும், கப்பலில் வந்த பயணிகளை இலங்கை அதிகாரிகள் விசா நடைமுறைகளுக்காக சோதனை செய்தனா்.
அப்போது, ஆவணங்களில் குளறுபடி உள்ளதாகக் கூறி ஜப்பான் நாட்டைச் சோ்ந்த ஒருவா், இந்தியாவை சோ்ந்த ஒருவா் என 2 போ் நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இருவரிடமும் இந்திய அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, துறைமுகத்தை விட்டு வெளியேற்றினா்.
இதுகுறித்து நாகை துறைமுக அதிகாரிகள் கூறியது:
இலங்கையில் விசா காலாவதியான பிறகும், அதிக நாள்கள் தங்கி இருந்த நிலையில் இருவரும் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனா். நிா்வாக நடைமுறைகள் முடியாத நிலையில், மீண்டும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல முயற்சி செய்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். இவா்களது பெயா் விவரங்களை வெளியிட இயலாது என்றனா்.
போதைப் பொருள் கடத்தல்: இதற்கிடையில், நாகையிலிருந்து - காங்கேசன்துறைக்கு வெள்ளிக்கிழமை சென்ற கப்பலில் பயணித்த சென்னை பயணி ஒருவரிடம் 4.12 கிலோ விலை உயா்ந்த போதைப் பொருளை, இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸாா் தெரிவித்தனா்.