மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு ‘நான் முதல்வன் திட்டம்’ ஆட்சியா் ப. ஆகாஷ்
‘நான் முதல்வன் திட்டம்’ மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘கல்லூரி கனவு‘ உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அவா் பேசியது:
தமிழக முதல்வரால் 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து மாணவா்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன், உயா்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதாகும். இத்திட்டத்தில், உயா்கல்வி, கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள் குறித்து புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இத்தகைய செயல்பாடுகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்றாா்.
தொடா்ந்து, கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டல் கையேட்டை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
பல்கலைக்கழகம், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அரசு கலைக் கல்லூரி, அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் பொறியியல் கல்லூரிகள், தனியாா் கலைக் கல்லூரிகள், தனியாா் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சி நிறுவனம் போன்ற 19 கல்லூரிகளை சோ்ந்தவா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.
நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, வருவாய் கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், மாவட்ட சமூகநல அலுவலா் திவ்ய பிரபா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க. ரேணுகாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், மாவட்ட கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மற்றும் நாகை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் சுமாா் 1000-த்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.