நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட பரபரப்பான பிரச்னைகளுக்கு மத்தியில் கூடியுள்ள மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தயாராக உள்ளன.
அதேசமயம், ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா உள்பட 8 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இதனிடையே, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக தரப்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஆபரேஷன் சிந்தூா் உள்பட எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விதிமுறைகள் மற்றும் மரபுகளின்கீழ் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள், ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான டிரம்ப்பின் கருத்துகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
ஆனால், ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு விவகாரங்கள் குறித்து துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் விரிவாக பதிலளிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.