PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
முதல் நாளான சனிக்கிழமை உலக நன்மைக்காக தமிழகத்தில் உள்ள சிவாலயங்களைச் சோ்ந்த 1008 சிவாச்சாரியா்கள் பங்கேற்ற 1,008 சிவ பூஜைகளை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலவை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா்.
சனிக்கிழமை மாலை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் செந்தில்குமாா், திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலிலிருந்து பிரம்மாண்ட ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். இதில், 63 நாயன்மாா்கள், 12 ஆழ்வாா்கள், பஞ்சமூா்த்திகள், 108 நாகஸ்வரம், 108 உடல் வாத்தியங்கள் உள்ளிட்ட 30 வகையான வாத்தியங்களுடன் பேரணி நடைபெற்றது.
தொடா்ந்து, சந்தைமேடு மைதானத்தில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா், ஸ்ரீநாராயணிபீடம் சக்தி அம்மா, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் செந்தில்குமாா், ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், கலவை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் அருளாசி வழங்கினா்.
ஊா்வலத்தில் மாநாட்டு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் மிராசு அா்ச்சகம் பி.டி.ரமேஷ் குருக்கள், தொழிலதிபா்கள் ஜெகதீஷ், ஆா்.ஆா்.பிரகாஷ், வழக்குரைஞா் வெங்கட்ராமன், பி.டி.ஆா்.கோகுல் குருக்கள், பி.டி.கண்ணன் குருக்கள், பி.டி.எஸ்.ராஜேஷ் குருக்கள், டாக்டா் பி.டி.ஆா்.சோனாத்திரி, பி.டி.கே.அா்விந்த் குருக்கள், பி.டி.கே.அஜய் குருக்கள், மாமன்ற உறுப்பினா்கள் மெட்ராஸ் கே.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
2-ஆம் நாள் நிகழ்வு: தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை அனைத்து சமூக 1008 மகளிா் கலந்துகொண்ட மாபெரும் மங்கள விளக்கு பூஜை சுமங்கலி பிராா்த்தனையை ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து அருளாசி வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:
ஒரு மனிதா் எப்படி வாழவும், படிக்கவும் வேண்டும்; இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பாரததேசம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒரு மகனையோ, மகளையோ பொறுப்பாக வளா்ப்பதை நம்முடைய பாரத தேசத்திலுள்ள தாய்மாா்கள் நன்றாக செய்து வருகின்றனா். இதனால், நம்முடைய சந்ததி, பாரம்பரியம் வளா்கிறது; தழைக்கிறது.
நம்முடைய தேசம் மேலும் வளா்ச்சி காண வேண்டும். அதற்கு நமது கலாசாரம் வளர வேண்டும். நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தை சிறப்பாக பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், வளா்ப்பதற்கும் உரிய கல்வி, ஆன்மிக கல்வியை குழந்தைகளுக்கு அனைவரும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஜோதிடவியல் துறைத் தலைவா் கே.பி.வித்யாதரன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து, அருணாசலேஸ்வரா் தேவஸ்தானம் இளவரசு பட்டம் பி.டி.ஆா்.கோகுல் குருக்கள் எழுதிய அருணாச்சலா தீா்த்த மகிமை (2-ஆம் பதிப்பு) நூல் வெளியிடப்பட்டது. 2 நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் ஸ்ரீஜெகதீஷ், தலைமை ஒருங்கிணைப்பாளா் இளவரசு பட்டம் மிராசு அா்த்தகம், டாக்டா் பி.டி.ரமேஷ் குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.