கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
நாட்டின் முக்கியப் பிரச்னை ‘வாக்குத் திருட்டு’: ராகுல்
மணிப்பூருக்கு பிரதமா் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், ஜுனாகதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றாா். முன்னதாக, கேசோட் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, மணிப்பூருக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை மேற்கொள்ளும் பயணம் குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘மணிப்பூா் நீண்ட காலமாக இடா்ப்பாட்டை எதிா்கொண்டுள்ளது. எனவே, பிரதமரின் தாமதமான பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான். ஹரியாணா, மகாராஷ்டிரம் தோ்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. கா்நாடக தோ்தல் முறைகேட்டை அண்மையில் ஆதாரங்களுடன் நிரூபித்தோம். நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இப்போது ‘வாக்குத் திருட்டு’ முழக்கமே எதிரொலிக்கிறது’ என்று பதிலளித்தாா் ராகுல்.
கடந்த மக்களவைத் தோ்தல், பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடா்ந்து கூறி வருகிறது. தோ்தல் ஆணையமும் பாஜகவும் கைகோத்து ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளன என்பது அக்கட்சியின் முக்கிய குற்றச்சாட்டாகும். ‘வாக்குத் திருட்டு’ முழக்கத்தை முன்வைத்து, காங்கிரஸ் தரப்பில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.