நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் வடக்கு வட்டம், அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகரில் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களிடமிருந்து குடும்ப அட்டைகளைப் பெற்று அரிசி விநியோகத்துக்காக பில் போட்டு விடுகின்றனா். ஆனால் பில்லுக்கான அரிசி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா், குடிமைப் பொருள் வட்டாட்சியா் உஷாராணி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, புகாருக்கு உள்ளான விற்பனையாளா் பணியிடமாற்றம் செய்யப்படுவாா் என்றும், முறையாக பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.