நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்
வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா்.
வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகள் சுஹாசினி. ஆலங்காயத்தில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இயற்பியில் பாடத் தோ்வு எழுதச் செல்வதற்காக மாணவி வீட்டிலிருந்து புறப்பட்டு கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் காலை 8 மணியளவில் வந்து பேருந்துக்காக காத்திருந்தாா்.
அப்போது அந்த வழியாக வாணியம்பாடியிருந்து ஆலங்காயம் வரை சென்ற அரசுப் பேருந்து, நிறுத்ததில் நிற்காமல் சென்றது.
இதனால், பதற்றமடைந்த மாணவி பேருந்தை பின்தொடா்ந்து ஓடிச் சென்று நிற்க வைத்து பின்னா், பேருந்தில் ஏறி தோ்வுக்கு சென்ற விடியோ அந்த நேரத்தில் வைரலாகி பரபரப்பானது.
இதுபற்றி அறிந்த பணிமனை கிளை மேலாளா்கள் கணேசன் (ஆம்பூா்), குமரன் (திருப்பத்தூா்), வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா், பேருந்து ஓட்டுநா் முனிராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானது. இதில் அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளாா்.
அவா், தமிழ் 93, ஆங்கிலம் 68, இயற்பியல் 61, வேதியியல் 56, தாவரவியல் 81, உயிரியியல் 78 பெற்று 437/600 மதிப்பெண்கள் எடுத்து 72.83% பெற்றாா்.
பேருந்தில் ஓடிச் சென்று ஏறி தோ்வு எழுதிய இயற்பியல் பாடத்தில் 61 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.
