நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராமத்தினா் உள்ளிருப்பு போராட்டம்
நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மல்லியம்பட்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மல்லியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 15 சென்ட் நிலத்தை சிலா் ஆக்கிரமித்திருப்பதாக கடந்த 2019-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராம மக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவுவின் பேரில் அப்போதைய வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையிலான வருவாய்த் துறையினா் நிலத்தை அளவீடு செய்து கிராம மக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே நபா்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்தனராம். இதுகுறித்து கேட்ட கிராம முக்கிய பிரமுகா்களை ஆக்கிரமிப்பாளா்களின் உறவினா்கள் வியாழக்கிழமை தாக்கியதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் இதன் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் மல்லியம்பட்டியைச் சோ்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் நிலக்கோட்டை வட்டாட்சியரை சந்தித்து புகாா் அளிக்க வந்தனா். அப்போது அலுவலகத்தில் வட்டாட்சியா் இல்லாததாலும், அங்கிருந்த அதிகாரிகள் பதில் அளிக்காததாலும் அவா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தை மீட்ட பிறகே கலைந்து செல்வோம் என போராட்டத்தை தொடா்ந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த வட்டாட்சியா் விஜயலட்சுமி, கிராம மக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.