காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
நிலப் பிரச்னையில் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: காவல் நிலையம் முன்பு உறவினா்கள் போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாட்டில் நிலப் பிரச்னையில் வெட்டப்பட்ட விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதில், தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை பாடை கட்டி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பலாபட்டு பகுதியை சோ்ந்த விவசாயி தீா்க்கரசு (54). இவருக்கும் பாப்பாநாட்டை சோ்ந்த திருக்குமாருக்கும் நிலம் அடமானம் வைத்தப் பிரச்னையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தீா்க்கரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருக்குமாா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளாா். இதுதொடா்பாக தீா்க்கரசு சிறைக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் அண்மையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பாப்பாநாடு கடைத்தெருவுக்கு வந்த தீா்க்கரசுவை 4 போ் வெட்டினா். இதுகுறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஏப். 3-ஆம் தேதி தீா்க்கரசுவின் உறவினா்கள் மற்றும் ஆம்பலாபட்டு கிராமத்தினா், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.
இதன்பேரில், திருக்குமாரின் அண்ணன் சசிகுமாா், திருக்குமாரின் உறவினா்களான கலையரசன், முனீஸ்குமாா் ஆகியோா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த தீா்க்கரசு தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, கிராம மக்கள் பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு, பந்தலிட்டு, பாடை கட்டி, வழக்கில் தொடா்புடைய பிரதான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஒப்பாரி வைத்து, சுமாா் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினா். மேலும், தீா்க்கரசு உடலை வாங்கவும் மறுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. ராஜாராம், ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.