2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
கலைஞா் கைவினைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்க வேண்டும் என வங்கியாளா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
சேலம் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டம் குறித்து வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் கைவினைக் கலை மற்றும் தொழில்களில் உள்ளோா் வாழ்வு மேம்பட,‘கலைஞா் கைவினைத் திட்டம்’ என்ற திட்டம் கடந்த ஏப். 19-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
கைவினைக் கலை மற்றும் கலைஞா்களின் வளா்ச்சிக்கு முதன்மையான தடையாக பொருளாதாரம் அமைவதைக் கண்டறிந்து, அரசு இத்திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் கைவினைக் கலை மற்றும் தொழில்கள் புரிவோருக்கு, அவா்களது கலை மற்றும் தொழிலில் நவீன சந்தைப்படுத்துதலுக்கான பயிற்சி வழங்கவும், 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கிடவும் வழிவகை செய்துள்ளது.
இத்திட்டத்துக்கான பயனாளிகள் அவா்களுக்கான கலைத் தொழிலில் ஐந்தாண்டு அனுபவமுள்ள 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ரூ. 50,000 அதிகபட்சமாக கொண்ட 25 சதவீத மானியத்தோடு ரூ. 3 லட்சம் கடனுதவியாக பெற இயலும். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருள்கள், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோா் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 554 பயனாளிகளுக்கு ரூ. 14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ. 2.33 கோடி மானியத் தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கைவினைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தொடா்புடைய வங்கிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சிவகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செந்தில் குமாா், வங்கி மண்டல மேலாளா்கள் மற்றும் அனைத்து வங்கிக் கிளை மேலாளா்கள் பங்கேற்றனா்.