நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
நிலையற்ற வர்த்தகத்தின் மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
மும்பை: ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் எதிரொலியாக, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 324.67 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 98.45 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. இந்த போக்கு தொடருமா என்று முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிந்து முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஜொமாட்டோ, டைட்டன், லார்சன் & டூப்ரோ மற்றும் மாருதி சுசூகி இந்தியா ஆகியவை சரிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.5 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.1 சதவிகிதமும் சரிந்தன. எஃப்.எம்.சி.ஜி தவிர ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், உலோகம், மூலதன பொருட்கள், எண்ணெய் & எரிவாயு, ரியாலிட்டி, பொதுத்துறை வங்கி ஆகியவை 1 முதல் 2 சதவிகிதம் சரிந்து முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4,43,269.25 கோடி ரூபாய் குறைந்து 3,93,85,818.73 கோடி ரூபாயாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்திய சந்தையில் சரிவு நீடித்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் சியோல் உயர்ந்தும் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்ந்து முடிந்தது.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,035.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,320.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 70 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!