நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதோடு மட்டுமின்றி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதனிடையே, தில்லியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரிடம் உறுப்பினர்கள் வழங்கினர்.
இது குறித்துப் பேசிய ஜகதீப் தன்கர்,
''நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968, 31 பி பிரிவின்படி நீதிபதி வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான குழுவை அமைக்கக் கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த நோட்டீஸ் இன்று எனது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், அவையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான உறுப்பினர்களின் ஆதரவு போதிய எண்ணிக்கையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இந்த நோட்டீஸ் மக்களவையிலும் வழங்கப்பட்டுள்ளதை சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுச் செயலாளருக்கு தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?