நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனைவி சரண்யா தேனி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனா்.
முனீஸ்வரன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால், கணவரைப் பிரிந்து சரண்யா தனது குழந்தைகளுடன் போடி முதல்வா் குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், சரண்யா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முனீஸ்வரன் தகராறு செய்து, சரண்யாவின் தாயைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின்பேரில், போடி நகரக் காவல் நிலைய போலீஸாா் முனீஸ்வரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.