நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை
கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளில் பாலம், உயா்நிலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அணுகு சாலை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
இதனால், அப்பகுதிகளில் இருந்து பயணிகள் நிழற்குடை தற்காலிகமாக அகற்றப்பட்டதால், பொதுமக்கள், மாணவ, மாணவியா் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினா். இதுகுறித்த செய்தி வெளியிட்டபின் பல்வேறு இடங்களில் நிழற்குடை அமைக்கப்பட்டது.
ஆனால், கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், நிழற்கூடம் அகற்றப்பட்டதால் நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவியா் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் 10 நாள்களுக்கு முன்பு கேட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், உடனடியாக நிழற்கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனா். ஆனால், இதுவரை அப்பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்படாமலே உள்ளது.