குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!
பகலில் பண்ணாரி சாலையைக் கடந்த சிறுத்தை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி சாலையை செவ்வாய்க்கிழமை சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானை, சிறுத்தை, புலிகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் இரவு நேரத்தில் சாலையைக் கடந்து செல்வது வழக்கம். அப்படி சிறுத்தைகள் சாலையைக் கடந்துசெல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன.
சிறுத்தை சாலையைக் கடந்து செல்வதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காக சாலையின் இருபுறமும் 12 மீட்டா் தொலைவு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளது.
இந்தநிலையில், பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையை சிறுத்தை செவ்வாய்க்கிழமை கடந்தபோது காா் வந்ததால் சற்று நின்று காா் சென்றவுடன் சாலையை சிறுத்தை கடந்தது. சிறுத்தையைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு விடியோ எடுத்தனா்.
கோடைக் காலம் காரணமாக சிறுத்தை தண்ணீா் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்ல வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்தில் பயணிக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.