பங்குச் சந்தை மோசடி: ரூ.56 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஆவடி பகுதியில் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.56.43 லட்சத்தை உரியவர்களிடம் காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை ஒப்படைத்தார்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் புகார் மனுக்கள் அளித்தனர். மனுக்களைப் பெற்ற அவர், அவற்றை இணையவழி குற்றப் பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூடுதல் துணை ஆணையர் அர்னால்டு ஈஸ்டர் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மகாலட்சுமி, பிரவீன்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை போலீஸார் அடையாளம் கண்டு தொடர்புடைய வங்கிக் கணக்கு உள்ள வங்கிக் கிளைகளுக்கு கடிதம் கொடுத்து மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்தனர்.
இதன் பிறகு பொதுமக்களிடமிருந்து பணம் பறித்த மோசடி நபர்கள் கடந்த மாதம் 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர், போலீஸார் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், புதன்கிழமை (ஜன. 8) இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடி மூலமாக பணத்தை இழந்த 18 பேருக்கு ரூ.56.43 லட்சத்தை வழங்கும் நிகழ்ச்சியில் காவல் ஆணையர் கி.சங்கர் தொகைகளை வழங்கினார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், காவல் ஆணையர் கி.சங்கர் உள்ளிட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.