பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்
பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
பசுந்தேயிலை பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒன்றிணைந்து, குறைந்தப்பட்ச ஆதரவு விலை கிடைக்கவேண்டி, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது சம்பந்தமாக இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் உதகை அருகே பாலகொலா ஊராட்சி தங்காடு கிராமத்தில் ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் மஞ்சை வி. மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி வரும் ஜூலை 17 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 விவசாய சங்கங்கள் இணைந்து உதகை எடிசி திடலில் போராட்டம் நடத்துவதென்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சங்கச் செயலாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எல்.போஜன், துணைச் செயலாளா்கள் பூபதி கண்ணன், கே.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.