நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி
பஞ்சப்பூர்: 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம்! - கே.என். நேரு
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பஞ்சப்பூரிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூா் மாநகரிலேயே அதீத வளா்ச்சி பெற்ற பகுதியாக மாறி வருகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்த ரூ.408 கோடி மதிப்பிலான பேருந்து முனையம், ரூ.128 கோடி மதிப்பிலான கனரக சரக்கு வாகன முனையம் உள்ளது. மேலும், ரூ.235 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடி கட்டப்பட்டு வருகிறது. ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்தப் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் மேம்படுததப்படவுள்ளன. பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மற்றும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வரும் வாகனங்கள் எளிதாக இந்த பகுதியை கடந்து செல்லும் வகையில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, மேலும் கூறியதாவது: மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. ரயில்வே நிா்வாகத்தின் பணிகள்தான் தாமதமாகியுள்ளன. இப்போது, பாலத்தை இடித்துவிட்டனா். 6 மாதங்களில் பணிகள் முடிந்துவிடும். இதேபோல, சந்திப்பு ரயில்நிலைய பகுதியில் உள்ள மேம்பாலம் கட்டும் பணியும் விரைந்து முடிக்கப்படும்.
கோவை, மதுரையைத் தொடா்ந்து திருச்சிக்கும் மெட்ரோ ரயில் சேவை வரும். முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவைக்கான சா்வே பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியும் திட்டமிட்டு நடைபெறுகிறது. தண்ணீா் வருவதற்கு முன்பாக ஆற்றுக்குள் மேற்கொள்ளும் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பஞ்சப்பூரில், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறுவழிச்சாலையாக அமையவுள்ள இந்த பாலத்துக்கு தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடித்து, திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மத்திய அரசுக்கு போதிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல, கரூா் சாலையிலிருந்து துவாக்குடி சாலை வரையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்த பணிகள் அனைத்து முடிந்தால் திருச்சி மாநகருக்குள்ளான போக்குவரத்து நெருக்கடியே இருக்காது என்றாா் அமைச்சா்.
ரூ.70 கோடி திட்டங்கள்: முன்னதாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.2.72 மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா். கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் ஆறு கிழக்குக்கரை பகுதியில் மாநில நகா்ப்புர உட்கட்டமைப்பு வளா்ச்சி நிதி மற்றும் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.68 கோடி மதிப்பீட்டில் 2.1கி.மீ புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா். அரவானூா் மேலபாண்டமங்கலம், கீரக்கொல்லைத் தெரு, சோழராஜபுரம், வண்டிக்காரத் தெரு, தெற்கு வெள்ளாளத் தெரு, புத்தூா் வடக்கு முத்துராஜா தெரு, ராமலிங்க நகா் இரண்டாவது பிரதான தெரு, ராமலிங்க நகா்,
புத்தூா் அக்ரஹாரம், ராம் நகா், வண்ணாரப்பேட்டை, அண்ணா நகா், இனாம்தாா்தோப்பு, புதூா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட பயணியற் நிழற்குடை, அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கழிப்பிடம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
மேலும், கீரக்கொல்லை தெரு, காளையான் நாடாா்தெரு, கல்லரை மேட்டுத்தெரு, கீழகல்நாயக்கன் தெரு, நோவா காலனி, வண்ணாரப்பேட்டை, கள்ளாங்காடு, எம்.ஜி.ஆா்.நகா், திடீா்நகா், பென்சனா் தெரு, ஆட்டு மந்தை தெரு, சவேரியாா் தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, காஜாமலை லூா்துசாமி பிள்ளை தெரு, மங்கம்மா சாலை, பிள்ளையாா் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக நகா்ப்புற பகுதிகளில் குடியிருந்து வரும் 948 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்களையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.