'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி நிதிஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அந்த மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கலாம்.
புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம். ஆனால் மக்கள் மீது அக்கறையில்லாத முதலமைச்சர் என்பது தெரிய வருகிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.
எனவே பயந்துதான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். முதலமைச்சர் தன் கடமையை செய்யத் தவறிவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்கள், பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மோடி தமிழகம் வந்தபோது எல்லாம் கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே மோடி தமிழகம் வரும் போது வெள்ளைக் கொடி பிடிக்கின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியான பிறகு ஒரு நிலைப்பாடு.

கடந்த 3 ஆண்டுகளாக இல்லாமல், இப்போது பிரதமரை சந்திக்க அவசியம் என்ன. பிரச்னை வந்துவிட்டது என்பதால் சந்திக்கிறார்கள். உதயநிதி கூறியது போல் பயமில்லை என்றால் அவர் தம்பி ஏன் வெளிநாட்டுக்கு ஓடினார். இந்த வீர வசனம் எல்லாம் உள்ளூரில் இருந்துகொண்டு பேச வேண்டும்.” என்றார்.