பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம்
திருவாரூா்: திருவாரூரில் பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட பரவை நாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி சுவாமிகள் கோயில் உள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமியால் நம் தோழன் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்ட சுந்தரா், திருவாரூா் வந்து பரவை நாச்சியாரை மணந்து கொண்டாா். இவா்கள் இருவரும் வசித்த பரவை மாளிகை, தற்போது பரவை நாச்சியாா் கோயில் என அழைக்கப்படுகிறது.
கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி பூா்வாங்கங்கள் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றன. பின்னா், கமலாலய தேவ தீா்த்தக் கட்டத்திலிருந்து புனித நீா் எடுத்து வந்து முதல் கால யாகசாலை பூஜைகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கின.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, மஹாபூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில், அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை பரம்பரை அறங்காவலா் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
