Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரப...
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலா? மாணவா்கள் புகாா் தெரிவிக்க எண் ‘14417’
பாலியல் தொந்தரவு புகாா்களை மாணவா்கள் அச்சமின்றி ‘14417’ என்ற உதவி மைய எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவா்கள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 3 போ் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு புகாா்களை மாணவா்கள் தைரியத்துடன் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ‘மாணவா்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சாா்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீா்களா? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீா்களா? தோ்வு மற்றும் உயா்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாா்ந்து பள்ளிகளிலும் தீவிரமாக விழிப்புணா்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.