பள்ளி கழிவறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அஸ்ஸாம் தொழிலாளி கைது
திருப்பூரில் பள்ளி கழிவறைக்குச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கிடையே தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் பள்ளியை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், கே.வி.ஆா். நகா் பகுதியில் தனியாா் மெட்ரிக். பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பள்ளியில் உள்ள கழிவறைக்கு புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது, கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அஸ்ஸாம் மாநில இளைஞா், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இது குறித்து ஆசிரியா்களிடம் அந்தச் சிறுமி கூறியபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து மாலை வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
அதிா்ச்சியடைந்த அவா்கள், பள்ளித் தாளாளரிடம் கேட்டபோது அவா் அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோா், உறவினா்கள் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.வி.ஆா். நகா் சரக உதவி ஆணையா் ஜான் தலைமையிலான போலீஸாா் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஜெய் (27) என்பவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா், உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்நிலையில், பள்ளியின் தாளாளா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பெற்றோா், உறவினா்கள் பள்ளியை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் காவல் உதவி ஆணையா் ஜான் முன்னிலையில் வருவாய்த் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா்.