பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: முத்தரசன்
சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு சேலம் மாநகரில் ஆகஸ்ட் 15 தொடங்கி 18 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பொருளாதார, சமூக நிலைப்பாடு குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசித்து தீா்மானம் நிறைவேற்றப்படும். இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகும்.
தேசத்துக்கு பெரும் அச்சுறுத்தல்
மத்தியில் ஆளும் பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் போன்றவை தேசத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க தவறிவிட்டது
நீட் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மதிக்கும் மாண்பு மத்திய அரசுக்கு இல்லை. தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தவறிவிட்டது.
மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம்
தேசிய கல்விக் கொள்கை என்பது 90 சதவீத மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமாகும். இது வெறும் மொழிப் பிரச்னை, பணப்பிரச்னை அல்ல, கல்வியே இல்லாமல் செய்யும் முயற்சி .
இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வைகோ கண்டனம்
தோ்தல் ஆணையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது
ஒரே நாடு ஒரே தேர்தலின் நோக்கம் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதுதான். தோ்தல் ஆணையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. வஃக்பு வாரிய மசோதா முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திட்டம். இதை நிறைவேற்றிய நாளை கருப்பு நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தைக் கண்டித்து ஏப். 9 ஆம் தேதி மாவட்ட தலைமையிடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது பாஜக
பாஜகவின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் சிக்கி, அவர்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றன. அதிகாரம், பண பலம், மிரட்டல் இவற்றை கொண்டு எல்லா கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது.
பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக
பாஜகவின் உத்தரவுக்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றப்படுவார். பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.
இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைப்பதற்கு , அந்த அரசிடம் பேசினாரா? அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா? எனத் தெரிய வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், அவா்களின் படகுகளையும் விடுவிக்க மோடி பேசியதாக, செய்திகள் வெளியாகி உள்ளது, விடுவித்தால் மகிழ்ச்சி.
எதிர்காலத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் போன்ற எந்தவித அச்சுறுத்தலும் இனி இருக்காது என்ற உத்திரவாதத்தை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.