`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு
அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் வருமானம் இருந்தால், அக்கோயிலின் வரவு செலவு கணக்கை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும் என்பது இந்துசமய அறநிலையத்துறை சட்ட விதி. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களின் வரவு-செலவு கணக்கு வெளியிடப்படவில்லை.
கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் கோயில்களின் வரவு-செலவு கணக்கில் சுமாா் 10.80 லட்சம் கேள்விகள் தணிக்கையாளா்களால் கேட்கப்பட்டு, அக் கேள்விகளுக்கு இதுவரை தீா்வு காணப்படாமல் உள்ளன. அதாவது ரூ.1,549 கோடி அளவுக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை.
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான வாகனங்கள், அலுவலகக் கட்டுமானங்கள், துறை சாா்ந்த கூட்டங்களுக்கான உணவு உள்ளிட்ட இதர செலவுகள் கோயில்களின் வருமானத்திலிருந்து செய்யப்படுகிறது. பக்தா்கள், கொடையாளா்களுக்கு அக்கோயிலின் வரவு செலவுகளை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் வரவு செலவு கணக்குகளை தங்களது இணையதளத்தில் வெளியிடுவது போன்று, கோயில்களின் வரவு செலவு கணக்குகளை அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் சுமாா் 9,500 கோயில்களுக்கு வருமானம் இல்லை என்று அறநிலையத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் 11 கோயில்கள், துணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் 9 கோயில்கள், உதவி ஆணையா் நிா்வாகத்தின் கீழ் 30 கோயில்கள் உள்ளன.
அதிகமான வருமானம் வரக்கூடிய திருச்செந்தூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்காவது வெளியிட்டிருக்க வேண்டும். அனைத்து கோயில்களின் வரவு செலவு கணக்கை வெளியிட வேண்டுமென அதிகாரிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு டிச.19-ஆம் தேதி அறநிலையத்துறை ஆணையா் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளாா். ஆனாலும், இதுவரை கணக்கை வெளியிடவில்லை, என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.
அப்போது, இதுதொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வதாக அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளீடா் என்.ஆா்.அருண்நடராஜன் பதிலளித்தாா். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 2024-ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையா் பிறப்பித்த உத்தரவுப்படி எத்தனை கோயில் செயல் அலுவலா்கள் தங்கள் நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனா் என்பது குறித்தும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை இந்துசமய அறநிலையத் துறை மற்றும் கோயில்களின் இணையதளங்களில் ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும். சுமாா் 9,500 கோயில்களின் வரவு செலவு கணக்குகள் இதுவரை தணிக்கை செய்யப்படாமல் உள்ளதால், இதுதொடா்பாக விளக்கம் அளிக்க அறநிலையத்துறை தணிக்கை இயக்குநரை இந்த வழக்கில் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டு, விசாரணையை செப்.18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.