கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்
பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாக மோசடி: நகைக் கடை உரிமையாளா் காவல் நிலையத்தில் சரண்
தஞ்சாவூரில் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகள் தருவாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகைக்கடை மற்றும் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவா் ராஜா(50). இவா் பழைய தங்க, வெள்ளி நகைகளைக் கொடுத்தால், புதிய நகைகளைத் தருவதாகவும், சீட்டு தவணைத் திட்டத்தில் சோ்ந்தால், செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகள் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தாா். இதை நம்பி ஏராளமானோா் ராஜாவிடம் நகைகள், ரொக்கத்தை முதலீடு செய்தனா்.
இந்நிலையில், நகைகள், ரொக்கம் முதலீடு செய்தவா்களுக்கு மாா்ச் மாதம் முதல் ராஜா திருப்பித் தரவில்லை. இதைத்தொடா்ந்து 3 வாரங்களுக்கு முன்பு ராஜா குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டாா். இது தொடா்பாக மேற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்களில் 80-க்கும் அதிகமானோா் புகாா் செய்தனா்.
மேலும், பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 25 போ் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் அண்மையில் புகாா் மனு அளித்தனா். அப்போது, ராஜா ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும், அவரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் வழக்குரைஞா் மூலமாக தஞ்சாவூா் நகர காவல் நிலையத்தில் ராஜா சரண் அடைந்தாா். தகவலறிந்ததும் பாதிக்கப்பட்டவா்கள் அங்கு குவிந்தனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.