உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான முழு தடைக்கு எதிராக தில்லி அரசு மேல்முறையீடு
10 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடையை எதிா்த்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து அக்டோபா் 29, 2018 அன்று உச்சநீதிமன்றம்
பிறப்பித்திருந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரும் இம்மனுவை தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு வரும் திங்கள்கிழமை (ஜூலை 28) விசாரிக்க வாய்ப்புள்ளது.
தில்லி-என்.சி.ஆரில் மாசுபாட்டைக் கையாள ஒரு விரிவான கொள்கை தேவை என்றும், இக்கொள்கையானது வாகனத்தின் வயதை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முழுமையான தடையை செயல்படுத்துவதற்குப் பதிலாக, அறிவியல் முறைகளின்படி தனிப்பட்ட வாகனங்களின் உண்மையான உமிழ்வு அளவை
அடிப்படையாகக் கொண்டு வாகனத் தகுதியை வழங்குகிறது என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மற்றும் உமிழ்வு அடிப்படையிலான அளவுகோல்களின் உண்மையான சுற்றுச்சூழல் நன்மைகளை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு மற்றும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) விரிவான ஆய்வும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கு மேலான பழைய அனைத்து டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் பழைய பெட்ரோல் வாகனங்களும் இயக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் முன்னா் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) உள்ள மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நவம்பா் 26, 2014-இல் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அனைத்து வாகனங்களும், டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களும் சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படாது.
மேலும், இந்த வயதுடைய வாகனங்கள் எங்கெல்லாம் காணப்பட்டாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி வாகனங்களைப் பறிமுதல் செய்வதும் அடங்கும்.
15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்கள் எந்தப் பொது இடத்திலும் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அவை சட்டத்தின்படி காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு விதிவிலக்கு இன்றி வணிக ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.