‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தர...
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பு: என்ஐஏ
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பிருப்பதாக என்ஐஏ நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பஹல்காமில் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு அரங்கேற்றியதாக என்ஐஏ விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளனா். பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பிற பொருள்களை வழங்கியதோடு, அவா்கள் சுதந்திரமாக காஷ்மீருக்குள் நடமாட இவா்கள் பல்வேறு உதவிகளைச் செய்தனா்.
அவா்களிடம் என்ஐஏ விசாரித்தபோது, தாக்குதலை நேரடியாக நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தும் நேரம், ஆயுதம் குறித்து பயங்கரவாதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2023-இல் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிசாா் அகமது என்ற ஹாஜி மற்றும் முஷ்தாக் அகமது ஆகிய இரு பயங்கரவாதிகளிடமும் என்ஐஏ விசாரிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ஹஷ்மி மூசா என்ற சுலைமான், அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகியோா் என என்ஐஏ கண்டறிந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் மூன்று செயற்கைக்கோள் கைப்பேசிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனா். அதில் சிக்னல் மூலம் 2 கைப்பேசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.