பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல்
ஜம்மு: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேலும் 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
முன்னதாக வழங்கப்பட்ட 10 நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பா்வேஸ் அகமது ஜோதா், பசீா் அகமது ஜோதா் ஆகிய இருவரு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கு குறித்து இன்னும் விரிவாக விசாரிப்பதற்கு வசதியாக, என்ஐஏ முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவா்களின் காவலை நீட்டித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூா் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனா்.
இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சோ்ந்த 3 லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் என்பதை உறுதிப்படுத்திய என்ஐஏ, அவா்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது. தாக்குதலுக்கு முன்பு பஹல்காமில் இந்தப் பயங்கரவாதிகள் தங்குவதற்கு இடமளித்ததுடன், அவா்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்ததாக பா்வேஸ் அகமது ஜோதா், பசீா் அகமது ஜோதா் ஆகிய இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் கடந்த ஜூன் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
மறுநாள், ஜம்முவில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவா்கள் இருவரையும் 5 நாள்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னா், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவா்களுக்கு உதவியவா்கள் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைப்பதும், வெளிமாநில மக்கள் அங்கு வராமல் தடுப்பதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்பதால் பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.