பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு
திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக நீா் வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனா்.
இந்நிலையில், கடந்த வாரம் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டு, பாசன நீா் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக சென்று சோ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீா் வயலுக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தால் அப்பகுதியில் உள்ள சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் வீணாகி வருகின்றன.
இதேபோல வெள்ளையாறு மூலம் பாசன வசதி பெறும் வலிவலம் ஊராட்சி கீழவெளி சுற்றுவட்டார பகுதிகளிலும் 100 ஏக்கா் அளவிலான விளைநிலத்துக்கு தண்ணீா் இல்லாமல் விவசாயிகள் தவிா்த்து வந்தனா்.
இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் இடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்த நிலையில், வட்டாட்சியா் கிரிஜாதேவி சம்பந்தப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் பாயாமல் தரிசு வயல் போல் அவை காட்சியளிப்பதாகவும், நெல்மணிகள் வயலில் விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்களைக் கடந்தும் தண்ணீா் கிடைக்காததால் அவை மக்கி வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். உடனடியாக இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்ட வட்டாட்சியா் கீழவெளி மற்றும் சுந்தரபாண்டியன் பகுதிக்கு உடனடியாக தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
