பாஜக மாவட்டத் தலைவா் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாகப் போராட்டம்
ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில், நடைபெற்ற உள்கட்சித் தோ்தலில் தன்னிச்சையாக நிா்வாகிகளை தோ்வு செய்த பாஜக மாவட்டத் தலைவா் பதவி விலகக்கோரி அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவின் உள்கட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் 23 ஒன்றியத் தலைவா் பதவிகள் உள்ளன. இதில், மாவட்ட தலைவா் தரணி ஆா்.முருகேசன் தன்னிச்சையாக 12 பேரைத் தோ்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், மாவட்டத் தலைவா் பதவி விலகக் கோரியும் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியினா் பாஜக மாவட்ட அலுவலகத்திலிருந்து பேரணியாக அரண்மனைப் பகுதிக்குச் சென்று, அங்கு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை இரண்டாவது நாளாக ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகம் முன் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.