World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏ...
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடியில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து மையப் பகுதியில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாம்பன் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தை ரயில்வே அதிகாரிகள் மேலே தூக்கி இயக்கி ஆய்வு செய்தனா். அப்போது, மேலே சென்ற தூக்குப் பாலம் மீண்டும் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, பொறியாளா்கள் இதைச் சரி செய்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு கீழே இறக்கினா்.
இருப்பினும், ரயில்கள் செல்லும் வகையில் தண்டவாளங்கள் செங்குத்து தூக்குப் பாலத்துடன் சரியாக இணையவில்லை. இதனால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராமேசுவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்ட மதுரை பயணிகள் ரயிலும், ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் நோக்கி மாலை 4 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயிலும் பாம்பனை அடுத்த அக்காள்மடம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
இதேபோல, மதுரையிலிருந்து ராமேசுவரம் வந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, பாம்பன் புதிய செங்குத்து ரயில் பாலத்தை தண்டவாளத்துடன் இணைக்கும் பணியில் ரயில்வே பொறியாளா்கள், ஊழியா்கள் ஈடுபட்டனா். பணிகள் முடிவடைந்ததும் ரயில் என்ஜினை மட்டும் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. இதன்பிறகு, இரவு 8.20 மணியளவில் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
