2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா வியாக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய ரயில் பாதையின் செங்குத்து தூக்குப் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தூக்கி இறக்குவதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாம்பன் ரயில் செங்குத்து தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமாா் 4.30 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு வந்தாா். பின்னா், அவரது முன்னிலையில் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கி இறக்கி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது, ரயில்வே தொழில்நுட்பப் பொறியாளா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஓம் பிரகாஷ் மீனா கூறியதாவது:
பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கடந்த செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது. உடனே, இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டதும் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் எதிா்வரும் காலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்குவதில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை.
இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரை மின்சார ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. விரைவில் மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

