பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ
பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பொய் சொல்லி என்னுடன் தொடர்பு வைத்திருந்தார். என்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டல் மற்றும் ஆபாச படங்களை அனுப்புவது போன்ற காரியத்தில் ஈடுபட்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹர்மீத்தை கர்னால் என்ற இடத்தில் கைது செய்தனர்.
அவரை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரும், அவரது கூட்டாளிகளும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு இரண்டு கார்களில் தப்பித்துச் சென்றுவிட்டனர். அவர்களது காரை போலீஸார் மற்றொரு வாகனத்தில் சென்று விரட்டினர்.

ஓர் இடத்தில் அவர்களது ஒரு காரை போலீஸார் மடக்கினர். அதிலிருந்து மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அந்த காரில் எம்.எல்.ஏ. இல்லை. மற்றொரு காரில் இருந்தார். அவர் காரில் தப்பிச்சென்றுவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.
எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்துள்ள 45 வயது பெண்ணிற்கு திருமணமாகி விவாகரத்து கிடைத்துவிட்டது. வெளிநாட்டில் அவரது மகள் படிக்கிறார். பதன்மஜ்ராவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது, எம்.எல்.ஏ தனது மனைவியை 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக கூறி 2021 ஆம் ஆண்டு, புகார்தாரரை லூதியானாவில் உள்ள ஒரு குருத்வாராவில் பதன்மஜ்ரா திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2022 ஆம் ஆண்டு, பதன்மஜ்ரா சனூர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர் தனது முதல் மனைவியின் பெயரை தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பதைக் புகார்தாரர் பார்த்தார். இது குறித்து கேட்டதற்கு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிடுவதாக தொடர்ந்து எம்.எல்.ஏ. கூறி வந்தார் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக எம்.எல்.ஏ.ஹர்மீத் பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மழை வெள்ளத்தை சரியாக அரசு கையாளவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பேஸ்புக் லைவ் நிகழ்ச்சியிலும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக சாடினார். டெல்லியில் இருந்து கொண்டு ஆம் ஆத்மி கட்சி தலைமை பஞ்சாப் அரசை சட்டவிரோதமாக ஆட்சி செய்து வருகிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். என் மீது வழக்கு பதிவு செய்யலாம். என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் எனது குரலை அடக்க முடியாது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.