காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லக்கூடிய சாலையின் நடுவே செவ்வாய்க்கிழமை காலை யானை இறந்துகிடப்பது தொடா்பாக வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து சென்ற மசினகுடி வனத் துறையினா் சோதனை நடத்தியதில், இறந்தது தந்தம் இல்லாத ஆண் மக்னா யானை என்பது தெரியவந்தது. இதையடுத்து, யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை தெப்பக்காடு மசினகுடி சாலையில் போக்குவரத்தை நிறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மக்னா யானையின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. உயிரிழந்த யானைக்கு 50 வயது இருக்கலாம் என்றும், உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் உள்ளதால் யானையின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
உடற்கூறாய்வுக்கு பின்னரே யானையின் இறப்பு குறித்து தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இந்த யானை மசினகுடி, மாயாறு, மாவனல்லா, பொக்காபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கதவை இரவு நேரங்களில் உடைத்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.