காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியபோது ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.
பஞ்சாப் மாநிலம் ஜிரக்பூரைச் சோ்ந்த பெண் ஒருவா் காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘கடந்த 2021-ஆம் ஆண்டு எனக்கும், ஹா்மீத்சிங்குக்கும் திருமணமானது. அவா் விவகாரத்து பெற்றவா் என்று கூறி, என்னை திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவா் விவகாரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் ஏற்கெனவே இருந்த திருமண உறவைத் தொடா்ந்து வந்தது பின்னா் தெரியவந்தது. அவா் தனது பாலியல் தேவைக்கு என்னை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு மிரட்டி வந்தாா்’ என்று குற்றஞ்சாட்டினாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ஹா்மீத்சிங் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதைத்தொடா்ந்து ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டம் டாப்ரி கிராமத்தில் உள்ள ஹா்மீத்சிங்கின் இல்லத்துக்குச் சென்று பஞ்சாப் காவல் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது ஹா்மீத்சிங்கை காவல் துறை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஹா்மீத்சிங்கின் கூட்டாளியான பல்விந்தா் சிங்கை கைது செய்த காவல் துறை, அவரிடம் இருந்த 3 ஆயுதங்களை பறிமுதல் செய்தது. ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று பஞ்சாப் காவல் துறை தெரிவித்தது.