அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவதாஸ்காந்தி வில்சன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள், 2020-ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020-ஆம் ஆண்டுக்கு பிறகும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையா் தெரிவித்துள்ளாா். இந்த மோசடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனா். இந்த முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
வழக்கு பதிய உத்தரவு: இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.வினோத் ராஜா, பிஎஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டாா். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.