நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
பிரசார பயணத்தால் மக்களிடையே எழுச்சி: எடப்பாடி பழனிசாமி
எனது பிரசார பயணத்தால் பொதுமக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நெசவாளா்களுடன் கலந்துரையாடிய எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: எனது பிரசார பயணத்தால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலம் 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக சிறப்பான வெற்றியை பெறும். கும்பகோணம் பொதுக்கூட்டமே அதற்குச் சாட்சி.
எனது மாவட்டத்திலும் நெசவாளா்கள் அதிகம் உள்ளனா். எனக்கும் உங்களது கஷ்டங்கள் தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மானியம், தள்ளுபடி தரப்படும். ஏழை நெசவாளா்களுக்கு பசுமை வீடுகட்டி தருவோம்.
ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். கடனுதவி வழங்கப்படும். விவசாயம் எப்படியோ அதுபோலத்தான் நெசவும்; நவீன முறைகளைப் பயன்படுத்துங்கள் என்றாா் அவா்.
பின்னா் அன்று பகல் தனியாா் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். அப்போது இஸ்லாமிய பெண்கள் கொடுத்த குல்லாயை எடப்பாடி பழனிசாமி அணிந்து கொண்டாா்.