சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கடை வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்த அவா் பேசியது: ‘தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் அண்மையில் நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடந்ததாகப் பரவலாக பேசப்படுகிறது. வினாக்களையும் பாடத்திட்டத்திலிருந்து கேட்காமல் வெளியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
எனவே பலரால் இத்தோ்வை சிறப்பாக எழுத முடியவில்லை. தோ்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை முறையாக ‘சீல்’ வைத்துக் கொண்டு போகவில்லை. எனவே இத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்தப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் என நடத்தப்படும் என திமுகவால் நடத்தப்படும் முகாம்களில் 46 பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதாக கூறி வீடு, வீடாகச் சென்று நாடகத்தை அரங்கேற்றுகின்றனா். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக ஸ்டாலினே ஒப்புக் கொள்கிறாா். இவற்றுக்கு இதுவரை அவா் ஏன் தீா்வு காணவில்லை?.
இந்நிலையில் 1.05 கோடி மனுக்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் 1.01 கோடி மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டதாகவும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பேட்டி கொடுத்துள்ளாா். ஆனால் மொத்தம் 27 லட்சம் மனுக்கள் மட்டுமே வந்துள்ளன. இந்தப் பச்சைப் பொய் குறித்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. அப்படித்தான் எங்களுடைய தலைவா்கள் எங்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளனா். எனவே, சிறுபான்மை மக்களுக்கு அதிமுக எப்போதும் துணையாக நிற்கும். ஆனால் மு.க. ஸ்டாலின் அரசு சிறுபான்மை மக்களை ஏமாற்றி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. சிறுபான்மை மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்.
அதிமுகவை பொருத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுகிறது. ஆனால், கொள்கை என்பது அதிமுகவுக்கு எப்போதும் நிரந்தரமானது. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் அதிமுக செயல்படுகிறது. எனவே திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை சிறுபான்மை மக்கள் நம்ப வேண்டாம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.