தொடா் திருட்டு: 3 போ் கைது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெஜினா நகரில் பூட்டப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருடு போயின. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்தனா்.
மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின்பேரில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம், காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, உதவி ஆய்வாளா் தென்னரசு உள்ளிட்டோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் சுகுமாா் (28), மஜித் சாலையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அமா்நாத் (24), ராமநாதபுரம் மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் சங்கா் (25) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டதும், இவா்கள் தஞ்சாவூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுகுமாா், அமா்நாத், சங்கா் ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.