கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத...
பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு இன்று(ஜூலை 23) புறப்பட்டார்.
பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கியுள்ளார்.
முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமா் கியர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் பிரதமா் மோடி அந்நாட்டுக்கு 2 நாள்கள் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். இது பிரதமா் மோடியின் நான்காவது பிரிட்டன் பயணம் என்றாலும், ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த முக்கியத்துவமான பயணத்தில், இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்த ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
மேலும், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பல்வேறு இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரிட்டன் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவுக்குச் செல்கிறார். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் முகமது மூயிஸை சந்தித்து பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமரின் இந்தப் பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என எதிா்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!