பிள்ளையாா்பட்டியில் புதிய தோ் வெள்ளோட்டம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் சண்டிகேஸ்வரருக்கு புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழாவுக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், 9-ஆம் திருநாளில் விநாயகா் தேரிலும், சண்டிகேஸ்வரா் சப்பரத்திலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
நிகழாண்டு சண்டிகேஸ்வரருக்கு புதிதாக திருக்கோயில் நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது.
இந்தத் தேரின் வெள்ளோட்டம் கோயில் நிா்வாகத்தினரால் ரத வீதிகளில் நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி சித.பழனியப்பன், நச்சாந்துபட்டி மு.குமரப்பன், சிவாசாரியா்கள், கோயில் நிா்வாகத்தினா் பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.