பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை
பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கோபாலி சவுக் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கூட்டம், ஷட்டரை பூட்டிவிட்டு, காவலர்களையும், ஊழியர்களையும் ஆயுத முனையில் 30 நிமிடங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்து, கடையிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புமிக்க விலையுயர்ந்த பொருள்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் இந்தப் பரபரப்பு காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தக் கொள்ளை தொடர்பாக பேசிய கடை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய், ``ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்த உடனே காவல்துறைக்கு தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர்கள் உரியநேரத்தில் பதிலளிக்கவில்லை. இது முழுக்க முழுக்க அதிகாரிகளின் தவறு. இந்த கொள்ளை இரவு நேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ நடக்கவில்லை." என்றார்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொள்ளையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கொள்ளையடிக்கப்பட்டதில் சில நகைகள், மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
VIDEO | Armed robbers stormed a Tanishq showroom in Bihar's Arrah this morning and looted jewellery worth crores. The robbery took place at the Gopali Chowk branch in the Arrah police station area and the incident was caught in the CCTV installed inside the showroom.
— Press Trust of India (@PTI_News) March 10, 2025
(Video… pic.twitter.com/sU44vmpWwo
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, ``சந்தேகத்திற்குரிய ஆறு நபர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் அர-பாபுராவிலிருந்து டோரிகஞ்ச் நோக்கிச் செல்வது தெரிந்தது. சிறிது தூரம் துரத்திச் சென்றபோது அவர்கள் காவல்துறையை நோக்கிச் சுட்டனர். காவல்துறை அதிகாரிகளும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேரை அவர்களின் காலில் சுட்டு கைது செய்திருக்கின்றனர். மீதமுள்ளவர்களை விரைவில் கைது செய்வோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.