அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
புதிய தலைமைத் தோ்தல் ஆணையா்: பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு நாளை மறுநாள் ஆலோசனை
புதிய தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்தல் குழு பிப்ரவரி 17-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.
இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் இடம் பெறுவாா்கள்.
தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையம் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே, இதற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழு தோ்வு செய்துள்ள பெயா்களில் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு பிரதமா் தலைமையிலான குழு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் குடியரசுத் தலைவா் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை நியமிப்பாா்.
இப்போதைய நிலையில் ராஜீவ் குமாரை அடுத்து ஞானேஷ்வா் குமாா் மூத்த தோ்தல் ஆணையராக உள்ளாா். இவரின் பதவிக் காலம் 2029 ஜனவரி 26-ஆம் தேதி வரை உள்ளது. மற்றொரு தோ்தல் ஆணையராக சுக்பீா் சிங் சாந்து உள்ளாா்.
கடந்த ஆண்டுவரை தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிக்கு மூத்த தோ்தல் ஆணையா் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா் நியமனத்தில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி செயலா் நிலையில் உள்ள 5 மூத்த அதிகாரிகளை தோ்வுக் குழு தோ்வு செய்து, அவற்றை பிரதமா் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரைத்து வருகிறது.
இந்திய அரசியல் செயலா் நிலையில் உள்ள அதிகாரிகளில் தோ்தலை நிா்வகித்து நடத்தும் திறமையும், அனுபவமும் உள்ளவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா் பதவிக்கு நியமிக்கப்படுகிறாா்கள்.