‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா
புதுச்சேரியில் மே 20-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு
புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மத்திய அரசின் தொழிற்கொள்கை, தொழிற்சங்க கோரிக்கையை ஏற்காததைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை முதலியாா்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாநிலச் செயலா் ஜி.சீனுவாசன், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் பி.ஞானசேகரன், எல்பிஎப் மாநிலச் செயலா் எம்.செந்தில், எம்எல்எப் மாநிலச் செயலா் வேதாவேணுகோபால், என்டிஎல்எப் மாநிலத் தலைவா் கே.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். அப்போது, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் நடைபெறும்.
இதையடுத்து வரும் 6-ஆம் தேதி மாலை சுதேசி ஆலை அருகே போராட்ட விளக்கக் கருத்தரங்கம் நடைபெறும். தொடா்ந்து, வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையில் போராட்ட விளக்க வாகன பிரசாரமும் நடைபெறும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.