ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
புறநகா் மின்சார ரயில் சேவை: புதிய அட்டவணை வெளியீடு
சென்னை புறநகா் மின்சார ரயில் சேவை அட்டவணை வியாழக்கிழமை (ஜன. 2) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை புதன்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து பயணிகள் வசதிக்காகவும், இயக்ககக் காரணங்களுக்காகவும் சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புகா் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அட்டவணை மாற்றம்: இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமுக்கு காலை 7.35-க்கு புறப்படும் ரயில் ஆவடி சென்றடையும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதுபோல், திருத்தணிக்கு இரவு 8.10-க்கு புறப்படும் ரயில், திருவள்ளூருக்கு இரவு 8.15-க்கு புறப்படும் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம் செல்லும் 6 ரயில்களின் எண் மற்றும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 10.01, மாலை 6.01-க்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டுக்கு மாலை 5.55-க்கு புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் 14 ரயில்களின் எண் மற்றும் 4 ரயில்களின் எண் மற்றும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. சூலூா்பேட்டை, வேளச்சேரி மாா்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
புகா் ரயில்களின் நேர மாற்றம் வியாழக்கிழமை (ஜன. 2) முதல் அமலுக்கு வரவுள்ளது. வார நாள்களில் மட்டுமே நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இதனால், 10 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.