புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் - ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோயை எதிர்க்கும் உலகளாவிய தடுப்பூசி உருவாக்குவதில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
இந்த ஆய்வு, எலிகளில் நடத்தப்பட்டதாக நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய mRNA தடுப்பூசி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?
இந்த தடுப்பூசி புற்றுநோய் செல்களை அல்லது வைரஸை இலக்காகக் கொள்ளாமல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ”ஒரு வைரஸை எதிர்த்துப் போராடுவது போல்” புற்றுநோயை எதிர்க்கத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி, இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதன் மூலம், வலுவான புற்றுநோய் எதிர்ப்பு எதிர்வினையை நாம் ஏற்படுத்த முடியும். இது ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி (நோயெதிர்ப்பு மருந்து) உடன் இணைந்து பயன்படுத்தப்பட்டபோது சிறப்பான பலன்களைக் காட்டியது.
இந்த தடுப்பூசி, குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளுக்கு மட்டும் அல்லாமல், பல்வேறு புற்றுநோய் நோயாளிகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு இன்னும் மனிதர்களில் சோதிக்கப்படவில்லை. ஆனால், மனிதர்களிலும் இதே முடிவுகள் கிடைத்தால் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, மற்றும் கீமோதெரபி போன்றவற்றுக்கு மாற்றாக இந்த உலகளாவிய தடுப்பூசி பயன்படுத்தப்படலாம். "இது ஒரு பொதுவான, எளிதில் கிடைக்கக்கூடிய புற்றுநோய் தடுப்பூசியாக மாறலாம்" என ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் டுவான் மிட்செல் தெரிவித்திருக்கிறார்.
"இந்த தடுப்பூசி குறிப்பிட்ட புற்றுநோய் அல்லது வைரஸை இலக்காகக் கொள்ளவில்லை, ஆனால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாகத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான வலிமையான எதிர்ப்பை உருவாக்குகிறது," என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் எலியாஸ் சயூர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.