பெட்ரோல் நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: புதுவை டிஜிபி நடவடிக்கை
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை புதுவை டிஜிபி ஷாலினிசிங் பிறப்பித்தாா்.
புதுச்சேரி குருமாபேட் அமைதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்(53). இவா் கரசூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி ஊசுடு ஏரியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் தனபிரவீன் அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் புருஷோத்தமனின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி புதுவை டிஜிபி ஷாலினிசிங் உத்தரவிட்டாா். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணையைத் தொடங்கவுள்ளனா்.