பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு ஓராண்டு சிறை
பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வேல்வாா்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் த.ஞானபிரகாசம் (34). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானபிரகாசம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஞானபிரகாசத்தை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஞானபிரகாசத்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா்.