பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த நாகராஜ் (50) கணக்கராக வேலை பாா்த்து வந்தாா். இதே தோட்டத்தில் கூலி வேலை செய்த நீலகண்டன் மனைவி சுப்புலட்சுமியை (45) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-இல் நாகராஜ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததால், அவரைக் கல்லால் தாக்கி கொலை செய்தாா். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளி நாகராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஆா்.கணேசன் ஆஜரானாா்.